திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.4 திருப்புகலியும் (சீர்காழி) - திருவீழிமிழலையும் - வினாவுரை
பண் - நட்டபாடை
மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற
    வாணுதல் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்கண்
    ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
1
கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்
    கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்
    புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோர்
    இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
2
கன்னிய ராடல் கலந்துமிக்க
    கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்
    புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்
    தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மின்னியல் நுண்ணிடை யார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
3
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்
    நன்னுதல் மான்விழி மங்கையோடும்
பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்
    புகலிநி லாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
4
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
    தையலோடுந் தளராத வாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
    புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை ஈசஎம்மான்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணி வார்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
5
சங்கொலி இப்பிசு றாமகரந்
    தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்
    எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
6
காமனெ ரிப்பிழம் பாநோக்கிக்
    காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
    புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
7
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள்
    இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் நெல்லியாடும்
    எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
8
செறிமுள ரித்தவி சேறியாறுஞ்
    செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப்
    புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி
    இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
9
பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த
    பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்
    புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற
    எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை
    விண்ணிழி கோயில் விரும்பியதே.
10
விண்ணிழி கோயில் விரும்பிமேவும்
    வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு
    பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி
    நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்
    பாரொடு விண்பரி பாலகரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.11 திருவீழிமிழலை
பண் - நட்டபாடை
சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
1
ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணான்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
2
வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
முன்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
3
பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொரி பலவும்
மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
4
ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
5
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
6
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.
7
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.
8
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயில் நிறை பொய்கை
வண்டாமரை மலர்மேல்மடி அன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.
9
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.
10
வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.

(*) ஊழின்வலி என்றும் பாடம்.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.20 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - நட்டபாடை
தடநில வியமலை நிறுவியொர்
    தழலுமிழ் தருபட அரவுகொ
டடல்அசு ரரொடம ரர்கள்அலை
    கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன்
    விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர்
    மறையவர் நிறைதிரு மிழலையே.
1
தரையொடு திவிதல நலிதரு
    தகுதிற லுறசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு
    திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி
    பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு
    பெறுதிடர் வளர்திரு மிழலையே.
2
மலைமகள் தனையிகழ் வதுசெய்த
    மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகரம்
    அறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர்
    களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதில்புடை தழுவிய
    திகழ்பொழில் வளர்திரு மிழலையே.
3
மருவலர் புரமெரி யினின்மடி
    தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினன்நலம் மலிதரு
    கரனுர மிகுபிணம் அமர்வன
இருளிடை யடையுற வொடுநட
    விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி
    மலிதர வளர்திரு மிழலையே.
4
அணிபெறு வடமர நிழலினி
    லமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர அறநெறி மறையொடு
    மருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில
    மலிபுன லணைதரு வயலணி
திணிபொழில் தருமணம் மதுநுக
    ரறுபத முரல்திரு மிழலையே.
5
வசையறு வலிவன சரவுரு
    வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி
    வுறுதிற லமர்மிடல்கொடு செய்து
அசைவில படையருள் புரிதரு
    மவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி
    பொழின்மலி தருதிரு மிழலையே.
6
நலமலி தருமறை மொழியொடு
    நதியுறு புனல்புகை ஒளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன்
    மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர்
    கெடவுதை செய்தவர னுறைபதி
(*)திலகமி தெனவுல குகள்புகழ்
    தருபொழி லணிதிரு மிழலையே.

(*) திலதமிதென என்றும் பாடம்.
7
அரனுறை தருகயி லையைநிலை
    குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெறி தரவிரல்
    நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர்
    வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு
    சிவனுறை பதிதிரு மிழலையே.
8
அயனொடும் எழிலமர் மலர்மகள்
    மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழல் நிகழ்வதொர்
    படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய
    வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதில் மதியது
    தவழ்தர வுயர்திரு மிழலையே.
9
இகழுரு வொடுபறி தலைகொடு
    மிழிதொழில் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர்
    கெடஅடி யவர்மிக அருளிய
புகழுடை யிறையுறை பதிபுன
    லணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர்
    செறிவொடு திகழ்திரு மிழலையே.
10
சினமலி கரியுரி செய்தசிவ
    னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை
    தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவலெழின்
    மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர
    இருநில னிடையினி தமர்வரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.35 திருவீழிமிழலை
பண் - தக்கராகம்
அரையார் விரிகோ வணஆடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.
1
புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.
2
அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.
3
உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தஅழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியார் அடியாரே.
4
கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவார் உயர்வாரே.
5
சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையான் உறைவீ ழிம்மிழலை
அடைவார் அடியார் அவர்தாமே.
6
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவார் அவலம் அறியாரே.
7
உளையா வலியொல் கஅரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே.
8
மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனார் அழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.
9
துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
10
நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்
குளிரார் சடையான் அடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.82 திருவீழிமிழலை
பண் - குறிஞ்சி
இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்
தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.
1
வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே.
2
பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.
3
இரவன் பகலோனும் எச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.
4
கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.
5
மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி
ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.
6
மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
7
எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
8
கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.
9
சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.
10
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
2
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
3
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
4
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
5
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
7
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
8
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
9
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
10
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.124 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.
1
இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புலிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.
2
கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.
3
மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.
4
புகழமகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.
5
அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.
6
கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
7
ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.
8
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.
9
மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.
10
நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.132 திருவீழிமிழலை
பண் - மேகராகக்குறிஞ்சி
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
    கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
    நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
    பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
    பொருள்சொல்லும் மிழலையாமே.
1
பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்
    தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
    கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு
    மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
    வீற்றிருக்கும் மிழலையாமே.
2
எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்
    புரமூன்றும் எழிற்கண்நாடி
உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்
    சிலைவளைத்தோன் உறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
    முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
    வாய்காட்டும் மிழலையாமே.
3
உரைசேரும் எண்பத்து நான்குநூ
    றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்
    அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
    நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
    கையேற்கும் மிழலையாமே.
4
காணுமா றரியபெரு மானாகிக்
    காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன் றுரவாகிப் பேருலகம்
    படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை
    உத்தமனை இறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
    போலோங்கு மிழலையாமே.
5
அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்
    றைம்புலனும் அடக்கிஞானப்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்
    துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
    கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
    மணஞ்செய்யும் மிழலையாமே.
6
ஆறாடு சடைமுடியன் அனலாடு
    மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
    குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
    மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழிநற்
    பண்பாடும் மிழலையாமே.
7
கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்
    கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
    நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த
    சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி
    விமானஞ்சேர் மிழலையாமே.
8
செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
    ஏனமொடு அன்னமாகி
அந்தமடி காணாதே அவரேத்த
    வெளிப்பட்டோன் அமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி
    நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்
    சேருமூர் மிழலையாமே.
9
எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்
    சாக்கியரும் என்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்
    கருள்புரியும் நாதன்கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
    பாராட்டும் ஓசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ
    டும்மிழியும் மிழலையாமே.
10
மின்னியலும் மணிமாடம் மிடைவீழி
    மிழலையான் விரையார்பாதஞ்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
    செழுமறைகள் பயிலும்நாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
    பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்
    ஈசனெனும் இயல்பினோரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com